வாரணாசியில் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான 37 வளர்ச்சித் திட்டப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்துள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி 2 நாள் பயணமாகச் சென்றிருக்கிறார். அங்குள்ள உமராஹாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்வர்வேத் மகாமந்திரை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “எப்போதும்போல காசியில் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானது. துறவிகளின் வழிகாட்டுதலின் கீழ், வளர்ச்சி மற்றும் புதிய கட்டுமானத்தில் காசி மக்கள் புதிய சாதனைகளை படைத்திருக்கிறார்கள். இதற்கு ஸ்வர்வேட் மகாமந்திர் ஒரு உதாரணம். ஸ்வர்வேட் மகாமந்திருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நான் மெய்மறந்தேன்.
வேதங்கள், உபநிடதங்கள், இராமாயணம், கீதை மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் தெய்வீக போதனைகள் ஸ்வர்வேட் மகாமந்திரின் சுவர்களில் படங்கள் மூலம் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது, வாரணாசி என்றால் வளர்ச்சி. வாரணாசி என்றால் தூய்மை, மாற்றம், நம்பிக்கை, நவீன வசதிகள் என்றாகி விட்டது. சுதந்திரமடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு, தற்போதுதான் நாட்டின் ஆன்மிகத் தலங்கள் பொருளாதார வளர்ச்சியில் புதிய சாதனைகளைப் படைத்து வளர்ச்சி கண்டு வருகிறது.
மக்கள் தங்கள் வாழ்க்கையில், நீர் சேமிப்பு, டிஜிட்டல் கட்டணத்தை ஊக்குவித்தல், தூய்மை, குரல் வளம், நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் செல்வது, இயற்கை விவசாயம், தினைகளை ஊக்குவித்தல், உடற்தகுதி மற்றும் குறைந்தபட்சம் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவுதல் ஆகிய 9 பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து, வாரணாசியில் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான 37 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும், தனது தொகுதியின் கிராமப்புற பகுதியான சேவாபுரியில் விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரையில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, காஷி சன்சத் கேல் பிரதியோகிதா 2023-ல் பங்கேற்பாளர்களின் சில நேரடி விளையாட்டு நிகழ்வுகளையும் மோடி பார்வையிடுகிறார். இதன் பிறகு, நிகழ்வின் வெற்றியாளர்களுடன் பிரதமர் உரையாடினார். மேலும், அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடுகிறார்.
பின்னர், சுமார் 10,900 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய நகர் – புதிய பௌபூர் சரக்கு வழித்தடத் திட்டத்தை மோடி திறந்து வைக்கிறார். அதேபோல, பல்லியா – காஜிபூர் நகர இரயில் பாதை இரட்டிப்புத் திட்டம் மற்றும் இந்தரா – டோஹ்ரிகாட் இரயில் பாதையை மாற்றும் திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.
இது தவிர, வாரணாசி – புதுடெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில், டோஹ்ரிகாட் – மவு மெமு இரயில் மற்றும் ஒரு ஜோடி நீண்ட தூர சரக்கு இரயில்கள் ஆகியவற்றையும் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மேலும், பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த 10,000-வது இன்ஜினையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், விரிவான சுற்றுலாத் தகவல்களுக்கான இணையதளம் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் அமைப்பு பிரதமரால் தொடங்கி வைக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த க்யூஆர் குறியீட்டு சேவைகளை வழங்கும் ஸ்ரீகாசி விஸ்வநாத் தாம், கங்கா குரூஸ் மற்றும் சாரநாத்தின் ஒளி மற்றும் ஒலி காட்சி ஆகியவற்றிற்கான ஒற்றை நடைமேடை டிக்கெட் முன்பதிவை இந்த ஒருங்கிணைந்த பாஸ் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.