கொட்டி தீர்த்து வரும் மழையால் திருச்செந்தூர் தனித்தீவானது. ஸ்ரீவைகுண்டம் அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக தண்டவாளம் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கனமழைக்கான ரெட் அலர்ட் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூரில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. விட்டு விட்டு பெய்யும் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
திருச்செந்தூரில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மின்சாரம்,தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருச்செந்தூர் சிவன் கோவிலில் குளம் போல் நீர் தேங்கியுள்ளது.
மழை நீரில் பேச்சியம்மன் சிலை மூழ்கும் நிலையில் உள்ளது. வதந்திகள் பரவுவதை தடுக்க ஒலிப்பெருக்கி மூலம் நடப்பு நிலவரத்தை அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே ஸ்ரீவைகுண்டம் அடுத்த தாதன்குளம் அருகே கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, மண் அரிப்பால் தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுவிட்ட நிலையில், தண்டவாளம் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அந்த ரயிலில் இருந்த நூறுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர்