குமரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதில், குறிப்பாக 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆறுகளும், அணைகளும், நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதாவது, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களிலும், இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி அதிக கனமழை கொட்டி வருகிறது.
தென்மாவட்டங்களில் அதிகமான அணைகளைக் கொண்ட மாவட்டம் திருநெல்வேலி. அதாவது, தென்காசி மாவட்டம் பிரிக்கும் வரை மொத்தம் 11 அணைகள் இருந்தது.
தற்போது, அதிக கனமழையால், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, காரையாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன.
அதாவது, இதுவரை நிரம்பாத பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் கூட நேற்று ஒரே நாளில் பெய்த மழை காரணமாக, அதன் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டன. இதனால், அணைகளுக்கு வரும் நீர் வெள்ளநீர், அணையின் பாதுகாப்பு கருதியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரும், மழை வெள்ள நீரும் இணைந்து மாவட்டத்தில் அனைத்து பகுதிகளையும் சூழ்ந்துள்ளது. இதனால், ஆற்றின் கரையோரம் உள்ள பொது மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.