கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு, பேட்டிங்கில் கொஞ்சம் குறைந்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 டி20 கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013-இல் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றதிலிருந்து 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் 5 கோப்பைகளை வென்று கொடுத்தார். குறுகிய காலத்திலேயே மும்பை அணியை வெற்றிகரமான அணியாக முன்னேற்றி இன்று இந்தியாவின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
இத்தகைய அனுபவமும், திறமையும் வாய்ந்த ரோகித் சர்மாவை அணி நிர்வாகம் கழற்றி விட்டதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு ரோகித் சர்மா சற்று ஓய்ந்து விட்டதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நாம் இதில் சரி, தவறுகளைப் பார்க்கக்கூடாது. ஆனால், இந்த முடிவு அணிக்கு நன்மை செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக பேட்டிங்கில் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் குறைந்து விட்டது. இதற்கு முன்பெல்லாம் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அதிக ரன்களைக் குவிப்பார்.
ஆனால், சமீப காலமாக அவர் சரியாக செயல்பட்டாததால் கடந்த 2 வருடங்களாக மும்பை ஒன்பது, பத்தாவது இடத்தைப் பிடித்தது. கடந்த வருடம் இந்திய அணி போராடி பிளே ஆஃப் வரை மட்டுமே சென்றது. அந்த வகையில் ஆரம்பக் காலங்களில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மாவை தற்போதை ஐபிஎல் தொடர்களில் நம்மால் காண முடியவில்லை.
ஒருவேளை இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அவர் தொடர்ச்சியாக விளையாடியதால் சற்று களைத்திருக்கலாம். மறுபுறம் குஜராத்துக்கு முதல் வருடம் கோப்பையை வென்ற பாண்டியா இரண்டாவது வருடம் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.