காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சுரங்க வழிப் பாதையை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சுமார் 4 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை, இஸ்ரேல் எல்லையை ஒட்டி வெறும் 400 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், இந்த சந்தரப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் 1,200 பேர் உயிரிழந்த நிலையில், 3,500 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், தனது நாட்டின் முப்படைகளையும் ஏவிவிட்டு காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது பதிலடித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இத்தாக்குதல் 75-வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கையும் 20,000-த்தை நெருங்கி விட்டது. மேலும், காஸாவின் பெரும் பகுதிகள் உருக்குலைந்து விட்டன. ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய முகாம்கள் உள்ளிட்ட இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்து விட்டது.
அதேபோல, ஹமாஸ் தீவிரவாதிகள் அமைத்திருந்த பதுங்குக் குழிகள், சுரங்க வழிப் பாதைகளையும் இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்து அழித்து வருகிறது. அந்த வகையில், தற்போது சுமார் 4 கிலோ மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சுரங்க வழிப் பாதையை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்திருக்கிறது. இந்த சுரங்கப் பாதை எராஸ் எல்லை கடப்புப் பகுதியில் 400 மீட்டர் எல்லையில் இருந்து தொடங்குகிறது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், “இந்த சுரங்கப்பாதை தேன்கூடு அமைப்பிலான வலைப் பின்னல் கொண்டது. இந்த சுரங்கப் பாதைக்குள் மின்சார வசதி, இரயில் தண்டவாளங்கள், தொலைதொடர்பு நெட்வொர்க் வசதி, கழிவுநீர் வெளியேற்றம், காற்றோட்ட வசதி என சகல வசிகளும் இருக்கிறது.
மேலும், சிறிய ரக விமானமே உள்ளே செல்ல முடியும். இந்த சுரங்கப்பாதையின் சுவர்கள் வலுவான கான்கிரீட் பூச்சு பூசப்பட்டிருக்கிறது. அதன் நுழைவு வாயில் 1.5 செ.மீ. தடிமன் கொண்ட உலோக உருளை போன்ற அமைப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டமைப்பை வடிவமைப்பதற்கு பல மில்லியன் டாலர் செலவும், பல ஆண்டுகள் கால அளவும் எடுத்திருக்கும்.
இந்த சிக்கலான வலைப்பின்னல் சுரங்கப் பாதையை வடிவமைத்தவர், இஸ்ரேல் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரின் சகோதரர் முகமது சின்வார். இந்த சுரங்கப் பாதையில் இருந்து தாக்குதலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், சுரங்கப்பாதை தொடர்பான வீடியோவையும், சுரங்கப் பாதைக்குள் முகமது சின்வார் வாகனம் ஓட்டும் வீடியோவையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறது.