ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் இரு நாட்களாக சிக்கித்தவித்த ஒன்றரை வயது குழந்தையை இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசியில் இரு நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பேருந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 800 பயணிகளுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
ரயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் பயணிகள் ரயிலில் சிக்கித்தவித்தனர். நேற்று அதிகாலை வரை நடைபெற்ற மீட்புப் பணியில், 300 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
கனமழை காரணமாக எஞ்சிய 500 பேரை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. மழை குறைந்தவுடன் இன்று காலை மீட்புப் பணி மீண்டும் தொடங்கியது. அப்போது ஓன்றரை வயது குழந்தையை இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.
இதுதொடர்பான வீடியோவை பாதுகாப்புத்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ளது. அதில், கர்ப்பிணி பெண் மற்றும் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 4 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IAF helicopters are deployed for HADR missions in #TamilNadu due to unprecedented rains in last 24 hrs.
Four passengers including a pregnant lady & baby aged 1.5 yrs were winched up and taken safely to Madurai.@IAF_MCC @IafSac @Def_PRO_Chennai @SpokespersonMoD pic.twitter.com/y7v1ptSPiL
— PRO Nagpur, Ministry of Defence (@PRODefNgp) December 19, 2023