அரிசியின் சில்லறை விற்பனை விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி அரிசி தொழில் சங்கங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டுச் சந்தையில் தட்டுப்பாடின்றி அரிசி கிடைக்கச் செய்யவும், அரிசி விற்பனை விலை சீராக இருக்கும் வகையிலும், பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய தடை வித்திருக்கிறது. மேலும், ஏற்றுமதி செய்யப்படும் அரிசி மீது 20% வரியையும் விதித்திருக்கிறது.
இது தவிர, அரிசி ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. எனினும், உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, காரீப் பருவத்தில் நல்ல விலைச்சல் இருந்தும், உள்நாட்டில் அரிசி விற்பனை விலை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பாசுமதி அல்லாத அரிசியின் உள்நாட்டு விலை நிலவரத்தை ஆய்வு செய்ய, அரிசி பதப்படுத்தும் தொழில் பிரதிநிதிகளுடன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா, நேற்று ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், அதிகபட்ச சில்லறை விலைக்கும், உண்மையான சில்லறை விலைக்கும் இடையே பரந்த இடைவெளி உள்ள நிலையில், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க, அதை யதார்த்தமான நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், இந்த காரீப் பருவத்தில் நல்ல விளைச்சல் இருந்தும் உள்நாட்டில் அரிசி விலை அதிகரித்து வருவது குறித்தும், இந்திய உணவுக் கழகத்தில் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பது குறித்தும், அரிசி ஏற்றுமதியில் பல்வேறு விதிமுறைகள் அமலில் இருப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.