பொங்கல் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட நிவாரணங்களை வங்கி கணக்கில் செலுத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
கடந்த 3,4 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பணம் கொடுக்கும் பணியும் நடைபெற்ற வருகிறது, இதனிடையே ரேசன் கார்டு இல்லாதவர்கள் விண்ணபித்தால் பரிசீலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப் பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.
நிவாரணங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும்போது பயனாளிகள் தாங்கள் சார்ந்துள்ள சங்கங்களை அணுக வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் நேரமும் மிச்சமாகும் என நீதிபதி கூறினார்.