குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணித்து வருகின்றன.
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடவரம்பன்கரை பகுதியில் உள்ள மேற்கு கடற்கரை சாலை தண்ணீரில் மூழ்கியது. இதனால் பொது போக்குவரத்து நேற்று இரவு வரை நிறுத்தப்பட்டது. தற்போது தண்ணீரின் அளவு குறைந்து உள்ளதால் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி சென்று வருகின்றன.
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி பரிதவித்து வந்தனர். இதோடு மட்டுமல்லாமல் பிரதான சாலைகளும் தண்ணீரில் மூழ்கி பொது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இதன் ஒரு பகுதியாக குமரி – கேரளா கடற்கரை மார்க்கமாக இணைக்கும் மேற்கு கடற்கரை சாலையில் நடவரம்பன்கரை பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இந்த சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது மழைப்பொழிவு குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அளவும் குறைக்கப்பட்டது.
இதனால் ஆற்றின் கரைபுரண்டு ஓடிய தண்ணீரின் அளவு குறையத் துவங்கியது. இதனை தொடர்ந்து இந்த சாலையில் தேங்கி நின்ற தண்ணீரின் அளவு சற்று குறைத்துள்ளது.
இதனையடுத்து இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி சென்று வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் சாலையில் இருபுறங்களிலும் இருக்கும் வீடுகள், கடைகள் ஆகியவற்றில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.
ஆற்றின் நீர்மட்டம் முழுமையாக குறைந்தால் மட்டுமே இந்த பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் குறையும் அதுவரை வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி தான் செல்ல வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.