நாடாளுமன்றத்தில் தனக்கு நேர்ந்த அவமதிப்பு குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் கேட்டறிந்ததோடு, வேதனையும் வருத்தமும் தெரிவித்ததாக குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 13-ம் தேதி பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர், மக்களவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இருந்து எதிர்கட்சிகளைச் சேர்ந்த 141 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து எதிர்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் ஒருவரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, அவை நடவடிக்கையின்போது மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் நடந்து கொள்வதைப் போல மிமிக்ரி செய்து காட்டி கேலி செய்தார்.
இதனை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி வீடியோவாகப் பதிவு செய்தார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த ஜெக்தீப் தன்கர், தன்னை இமிடேட் செய்தது வெட்கக்கேடான செயல் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தமும், வேதனையும் தெரிவித்ததாக மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தன்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சில மாண்புமிகு உறுப்பினர்கள் அரங்கேற்றிய மோசமான நாடகம் குறித்தும், அது மாட்சிமை பொருந்திய நாடாளுமன்ற வளாகத்திலேயே அரங்கேற்றப்பட்டது குறித்தும் மிகுந்த வலியடைந்ததாக பிரதமர் மோடி என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற சிறுமைகளை கடந்த 20 வருடங்களாக தானும் அனுபவித்து வருவதாகக் கூறினார். ஆனால், அரசியலமைப்புப் பதவியில் உள்ளவருக்கு, அதுவும் குடியரசு துணைத் தலைவருக்கே, நாடாளுமன்ற வளாகத்திலேயே இத்தகைய சம்பவம் நடந்தது துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, தன்கர் அவமதிப்பு செய்யப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் முர்மு வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “நாடாளுமன்ற வளாகத்தில் நமது மதிப்பிற்குரிய குடியரசுத் துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களை வெளிப்படுத்த சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆனால், அவர்களின் வெளிப்பாடு, கண்ணியம் மற்றும் மரியாதையின் விதிமுறைகளுக்குள் இருக்க வேண்டும். அதுதான் நாங்கள் பெருமைப்படும் நாடாளுமன்ற பாரம்பரியம். அதை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
I was dismayed to see the manner in which our respected Vice President was humiliated in the Parliament complex. Elected representatives must be free to express themselves, but their expression should be within the norms of dignity and courtesy. That has been the Parliamentary…
— President of India (@rashtrapatibhvn) December 20, 2023