விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரையில் கலந்துகொண்டவர்களுடன் உரையாடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வருமான வரித்துறையை அனுப்புவேன்னு பயப்படுறீங்களா என்று சிரித்துக் கொண்டே கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, காசி தமிழ்ச் சங்கமம் 2.0-வை தொடங்கி வைத்த பிரதமர், கங்கா ஆரத்தியிலும் கலந்துகொண்டார்.
மேலும், 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரையில் கலந்துகொண்டவர்களுடன் உரையாடினர். இந்த நிகழ்ச்சியில், யு.பி.எஸ்.சி.க்கு தயாராகி வரும் மாற்றுத்திறனாளி வியாபாரி ஒருவரும் கலந்து கொண்டார்.
அப்போது, அந்த மாற்றுத்திறனாளி இளைஞரிடம் பேசிய பிரதமர் மோடி, “என்ன படித்திருக்கிறார்கள் என்ன வேலை செய்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த இளைஞர், “வர்த்தக துறையில் டிகிரி படிப்பை முடித்திருக்கிறேன். தற்போது, ஒரு கடையை நடத்தி வருகிறேன். எனினும், யு.பி.எஸ்.சி. தேர்வில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து, “மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலம் எந்த வகையில் பயனடைந்தீர்கள்” என்று மோடி கேட்க, அந்த இளைஞரோ கடை வைக்க உதவியது முதல் தனக்குக் கிடைத்த நலத்திட்டங்கள் வரை கூறினார். பிறகு, “தினமும் எத்தனை பேர் கடைக்கு வருவார்கள்” என்று மோடி கேட்க, “நான் எண்ணிப் பார்த்ததில்லை. ஆனால், தினமும் 10 முதல் 12 பேர் வருவார்கள்” என்றார்.
இதையடுத்து, “அப்படியென்றால் மாதம் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?” என்று பிரதமர் மோடி கேட்டதும், அந்த இளைஞர் சற்றே தயக்கத்துடன் “நான் அதைப் பற்றியெல்லாம் எண்ணியதில்லை” என்றார். உடனே பிரதமர் மோடி, “பரவாயில்லை, என்னிடம் சொல்ல வேண்டாம். வருமான வரித்துறை அதிகாரிகளை அனுப்பி விடுவேன் என்று பயப்படுகிறீர்களா?” என்று சிரித்தபடியே கேட்க, சுற்றி இருந்த அனைவரும் சிரித்தனர்.
இந்த வீடியோ காட்சிகள்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.