கடந்த வாரம் கடற்கொள்ளையர்களால், கடத்தப்பட்ட ஐரோப்பாவின் மால்டா நாட்டுக்கு சொந்தமான எம்.வி. ருயன் கப்பலில் இருந்து ஒருவரை இந்திய கடற்படை மீட்டுள்ளது.
கடந்த 16-ஆம் தேதி ஐரோப்பாவின் மால்டா நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. ருயன் என்ற சரக்கு கப்பல், 18 பணியாளர்களுடன் ஆப்பிரிக்க நாடான சோமாலியா நோக்கி சென்று கொண்டிருந்தது.
அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, சரக்கு கப்பலில் ஆறு கடற்கொள்ளையர்கள் ஏறி உள்ளனர். கப்பலில் இருந்த 18 பேரையும் கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்து, கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உடனடியாக, இது குறித்து கப்பலின் கேப்டன், அவசர உதவி எண்ணுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து கடற்கொள்ளை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 18 பணியாளர்களில் ஒருவரை இந்திய கடற்படை மீட்டுள்ளது. துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் இருந்த அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.
கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டுள்ள கப்பலுக்கு மேலே கடற்படையின் விமானம் பறந்து கொண்டிருப்பதாகவும், கப்பலின் நடமாட்டம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாகவும், தற்போது அந்த கப்பல் சோமாலிய கடற்கரையை நோக்கி செல்வதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.