இரயில்வே வேலைக்கு லஞ்சம் வாங்கியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து விசாரிக்க லாலு பிரசாத் யாதவ் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நாளை ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.
கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்போது, பாட்னாவைச் சோ்ந்த சிலரை இரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவர்களுக்கு சொந்தமான நிலத்தை லஞ்சமாக குறைந்த விலைக்குப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., மேற்கண்ட நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கி இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, இது தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.
இதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை அமலாக்கத்துறை கடந்த நவம்பர் மாதம் கைது செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.
அந்த சம்மனில், தேஜஸ்வி யாதவ் டிசம்பர் 22-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறியிருக்கிறது. அதேபோல, பீகார் முன்னாள் முதல்வரும், தேஜஸ்வி யாதவின் தந்தையுமான லாலு பிரசாத் யாதவ் டிசம்பர் 27-ம் தேதி டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருக்கிறது.
இந்த வழக்கில் ஏற்கெனவே தேஜஸ்வி யாதவிடம் ஏப்ரல் 11-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதேசமயம், லாலு பிரசாத் யாதவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.