அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இதனால், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட தி.மு.க.வினர் திக்… திக்… மனநிலையில் இருந்து வருகின்றனர். மேலும், இத்தீர்ப்பு தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் க.பொன்முடி, கடந்த 2006 – 11 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016-ம் ஆண்டு பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த நவம்பர் 27-ம் தேதி இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெயச்சந்திரன், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் மேலோட்டமாக விசாரித்திருக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்க்கப்பட்டிருக்கிறது. அதாவது, 64.90 சதவீதம் அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்திருக்கிறார்கள்.
ஆகவே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபணமாகியுள்ளன. ஆனால், அவர்களது வருமானத்தை தனித்தனியாக பிரித்துப் பார்த்து, வருமானவரி கணக்கு அடிப்படையில் இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது அடிப்படையிலேயே தவறு.
எனவே, அந்தத் தீர்ப்பை ரத்து செய்கிறேன். இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கிறேன். இதுகுறித்த தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக பொன்முடியும், அவரது மனைவியும் டிசம்பர் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, காணொலி வாயிலாகவே ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இதையடுத்து, பொன்முடி இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார். இதனால், சென்னை உயர் நீதிமன்ற வளாகமே பரபரப்பாகக் காணப்படுகிறது. தீர்ப்பில் பொன்முடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படலாம். ஆகவே, இத்தீரப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.