அயோத்தி இராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மொழிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் வைக்கப்படும் மூலவர் ஸ்ரீராமர் சிலை, ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இதையொட்டி, அனைத்து சங்கராச்சாரியார்களுக்கும், மகாமண்டலேசுவரர்களுக்கும், சீக்கிய மற்றும் பௌத்த சமூகங்களின் உயர்மட்ட ஆன்மீகத் தலைவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆகவே, நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் அயோத்திக்கு வரவிருக்கிறார்கள்.
ஸ்ரீராம ஜென்மபூமியில் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய ராம் லல்லா சிலைகளை கணேஷ் பட், அருண் யோகிராஜ் மற்றும் சத்யநாராயண் பாண்டே ஆகிய 3 சிற்பிகள் உருவாக்கி வருகின்றனர். இந்த மூன்றில் 5 வயது குழந்தையின் மென்மையை உயிர்ப்பிக்கும் ஸ்ரீராமர் சிலை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தொடர்ந்து, கும்பாபிஷேக சடங்குகள் ஜனவரி 16 முதல் தொடங்கும். காசியிலிருந்து கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் மற்றும் லக்ஷ்மிகாந்த் தீட்சித் ஆகியோர் பிரதிஷ்டை பூஜையை நடத்துகிறார்கள். கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து, விஸ்வபிரசன் தீர்த் தலைமையில் 48 நாள் மண்டல பூஜை நடைபெறுகிறது.
இந்த நிலையில், அயோத்தியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக லக்னெள மண்டல காவல்துறை இணை இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “இராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழாவின்போது, அயோத்தியில் பக்தர்கள் பெருமளவு சாலைகளில் பாதயாத்திரையாக வருவார்கள் என்பதால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். சில சாலைகளில் ஆட்டோக்களுக்கும் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு வரவிருப்பதால், அவர்களின் வசதிக்காக நகரின் பல்வேறு இடங்களில் வழிகாட்டிப் பலகைகளும், அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட உள்ளன. ஹிந்தி, ஆங்கில மொழிகளுடன் நாட்டில் அதிகமாக பேசக்கூடிய தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.