சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த இலாகாக்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் வதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாள்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் பொன்முடி, அமைச்சர் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார். இதனையடுத்து அவர் வகித்து வந்த இலாகாக்கள் அமைச்சர் ராஜகண்ணபனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளை இனி அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.