சச்சின் டெண்டுல்கரின் 14 வருடச் சாதனையை வங்கதேச அணியின் தொடக்க வீரர் சவுமியா சர்கார் முறியடித்துள்ளார்.
நியூசிலாந்து – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாகச் சவுமியா சர்கார் 151 பந்துகளில் 169 ரன்களை குவித்தார். அதேபோல் முஷ்பிகுர் ரஹீம் 45 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சென்றனர்.
292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 47 வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 296 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருது வங்கதேச வீரரான சவுமியா சர்காருக்கு வழங்கப்பட்டது. இவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 169 ரன்கள் எடுத்ததன் மூலம் நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் குவித்த ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் 163 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 14 ஆண்டுக் கால சாதனையை வங்காளதேச வீரர் சர்கார் நேற்று முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.