தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் மசோதா 2023, மக்களவை இன்று நிறைவேறியது.
இந்த மசோதா, தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையர்களின் சேவை நிபந்தனைகள் மற்றும் வணிகப் பரிவர்த்தனை) சட்டம் 1991-க்கு மாற்றாக இருக்கும். இது தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமனம், சம்பளம் மற்றும் நீக்கம் ஆகியவற்றை வரையறுக்கிறது.
மசோதாவின் விதிகளின்படி, தலைமைத் தேர்தல் ஆணையம் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் ஒரு தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வுக் குழுவில், பாரதப் பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் மிகப்பெரிய கட்சியின் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள்.
இந்த மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சிந்தா அனுராதா, தேர்தல் செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் சட்டத்தை ஆதரித்தார்.
அதேபோல, பா.ஜ.க.வின் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்த மசோதா தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் செயல்பட அனுமதிக்கும். தேர்தல் ஆணையர் நியமனத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
சட்டத்தின் கீழ், சட்டச் செயலாளர் தலைமையிலான தேடல் குழு, தேர்வுக் குழுவுக்கு பெயர்களைக் கொண்ட குழுவை முன்மொழியும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களின் சம்பளம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சமமாக இருக்கும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது இதர தேர்தல் ஆணையர்கள் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், அது எந்த நீதிமன்றத் சட்டத்தை மீறும் வகையில் இருக்காது” என்றார்.