நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணிகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையிடம் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 13-ம் தேதி மக்களவை நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து புகை குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு நுழைந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 9 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பழைய மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணிகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரிடம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்ப பணி தொடர்பாக நாடாறுமன்ற வளாகத்தில் சர்வே நடத்த மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து இனி நாடாளுமன்ற வளாகத்திற்கு நுழையும் அனைவரும் விமான நிலையங்களை போல கையடக்க டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்யப்படுவார்கள். அவர்களின் உடைமைகள் எக்ஸ்ரே இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கப்படும். பின்னர் தான் அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.