ஒரு வாரத்திற்கு பிறகு சபரிமலையில் மீண்டும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக, கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதை அடுத்து அன்று முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், 18 மணி நேரம் வரை காத்திருந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காடுகளிலும், வழிகளிலும் பக்தர்கள் தடுக்கப்பட்டதால், உணவும் தண்ணீரும் இல்லாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
இந்த சம்பவம் கேரளா அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் உட்பட பல மாநில அரசுகளும் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதினர். இதைத் தொடர்ந்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சபரிமலையில் வந்து நிலைமைகளைப் பார்வையிட்டு, எல்லாம் சரி செய்து விட்டதாக கூறி சென்றனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பம்பையில் சில மணி நேரமும், அதைத்தொடர்ந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் வரை பல மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தலுக்கு செல்கின்றனர்.