ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு மாதத்திற்குள் இப்பகுதியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட 2-வது தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் உள்ள டி.கே.ஜி. எனப்படும் தேரா கி கலி என்ற இடத்தில் இராணுவ டிரக் சென்று கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், அந்த டிரக் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்காக அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன. மேலும், சம்பவ இடத்திற்கு கூடுதல் இராணுவம் வரவழைக்கப்பட்டு, என்கவுன்ட்டர் நடந்து வருவதாக, இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே, கடந்த மாதம் ரஜோரியின் கலாகோட்டில் இராணுவம் மற்றும் சிறப்புப் படையின் நடத்திய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 2 இராணுவ கேப்டன்கள் உட்பட 5 வீரர்கள் வீரமரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ரஜோரி, பூஞ்ச் பகுதியில் நடந்த இரட்டை தாக்குதல்களில் 10 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இப்பகுதி 2003 மற்றும் 2021-க்கு இடையே பெரும்பாலும் தீவிரவாதம் இல்லாமல் இருந்தது. இதன் பிறகு இப்பகுதி தீவிரவாதிகளின் மையமாகவும், கடந்த சில ஆண்டுகளாக இராணுவத்தின் மீது பெரும் தாக்குதல் நடத்தும் இடமாகவும் மாறி இருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது 35 இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.