இந்திய அணியின் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ஆன கே.எல்.ராகுல் 14 ஆண்டுகளாக யாராலும் எட்ட முடியாமல் இருந்த தோனியின் சாதனை ஒன்றை நெருங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக திகழ்பவர் தான் கே.எல்.ராகுல். நடந்து முடிந்த ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் தேவையான நேரத்தில் சிறப்பாக விளையாடி அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.
நடந்து முடிந்த ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் மட்டுமே கே.எல்.ராகுல் 10 போட்டிகளில் 452 ரன்களை குவித்தார். மேலும் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரின் நேற்றையப் போட்டியில் கே.எல்.ராகுல் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதற்கு முந்தையப் போட்டியில் அரைசதம் எடுத்தார். இதன்மூலம் 2023 ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டியில் 1000 ரன்களை எடுத்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.
மொத்தமாக இந்த வருடத்தின் ஒரு நாள் தொடர்களில் கே.எல்.ராகுல் 24 போட்டிகளில் 1060 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம், இந்திய விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன்களில் ஒரே ஆண்டில் 1000 ஒருநாள் போட்டி ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் கே எல் ராகுல்.
இதில் முதலிடத்தில் இருக்கும் வீரர், இந்தியாவின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆனா மகேந்திர சிங் தோனி. இவர் 2008ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் 1098 ரன்களை எடுத்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு 1198 ரன்களை குவித்தார்.
அதன்பிறகு 14 வருடங்களுக்குப் பிறகு தற்போது கே.எல்.ராகுல் இந்த சாதனையைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.