வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகரில் உள்ள சிக்னேச்சர் வியூ அபார்ட்மென்ட் பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறி, அதில் வசிக்கும் மக்களை வெளியேறும் படி டெல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி குடியிருப்பு சங்கத்தின் 12 அடுக்குமாடி குடியிருப்புகள் பாதுகாப்பற்றவை என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதில், உள்ள குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், இங்கு மக்கள் குடியிருக்க முடியாத சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 7 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என குடியிருப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி முகர்ஜி நகரில் உள்ள சிக்னேச்சர் வியூ அடுக்குமாடி குடியிருப்பு 2007-2009 க்கு இடையில் கட்டப்பட்டது.
இதில், நடுத்தரம் மற்றும் உயர்த்தரம் என இரு வகைகளில் 336 குடியிருப்புகள் உள்ளன. ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது குடியிருப்புகள் சேதமடைந்து பாதுகாப்பாற்றதாக இருப்பதாக டெல்லி மேம்பாட்டு ஆணையம் நடத்திய தொழில்நுட்ப ஆய்வில் தெரியவந்தது.
இதனை அடுத்து, இடிந்து விழும் அபாயத்தில் உள்ள 12 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த 18-ஆம் தேதி 7 நாட்களுக்குள் (டிசம்பர் 25ம் தேதிக்குள்) காலி செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால், 7 நாட்களுக்குள் முழுமையாக காலி செய்ய உத்தரவுக்கு குடியிருப்போர் நலச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.