உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பல மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம் முழுவதும் வேகமாக பரவியது. கொரோனாவால் உலகில் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் உருமாறி கொண்டே இருக்கிறது. இது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், இந்தியாவில் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இன்றைய நிலவரப்படி நாட்டில் புதிதாக 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 80 சதவீத பாதிப்பு கேரளாவில் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 265 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லி அடுத்த நொய்டாவில் பல மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள, மக்கள் அடர்த்தி மிகுந்த நொய்டாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.