சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 280 கோடி மதிப்பிலான, மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுகிறது. அதேபோல், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவைகள் கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தடுப்பதற்காக இந்திய கடலோரக் காவல் படையினரும், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கடலோர காவல் படையினர் அதிநவீன படகுகள் மூலம் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தி செல்ல இருப்பதாக, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கடந்த 10-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து, இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட உதயகுமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பெரம்பூரைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரிடம் போதைப்பொருள் வாங்கியதாக ஒப்புக் கொண்டார்.
இதை அடுத்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பூருக்கு சென்ற போலீசார், அக்பர் அலி என்பரை கைது செய்தனர்.
மேலும், அக்பர் அலி மறைத்து வைத்திருந்த 54 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.280 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம், தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.