தமிழ்நாட்டில் அதிகமான விமானப் போக்குவரத்து உள்ள விமான நிலையம் என்றால், சென்னைக்கு அடுத்து, திருச்சிதான். நாள்தோறும் திருச்சி விமான நிலையத்திலிருந்து பெரும்பாலான உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் சீறிப் பறந்து வருகின்றன.
குறிப்பாக, திருச்சி விமான நிலையத்திற்கு 200 பேர் இருக்கை கொண்ட பெரியபெரிய விமானங்களும் வந்து செல்லும் வகையில் புதிய முனையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 951 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது.
சுமார் 134 ஏக்கர் நிலப்பரப்பில் 75 ஆயிரம் சதுர அடியில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. விமானங்கள் வந்து செல்ல 12 வழித்தடங்கள், பயணிகள் சென்றுவர 4 வாயில்கள், 60 சோதனை கவுண்டர்கள் என பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விமான முனையம் விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரும் 2024-ம் ஆண்டு புத்தாண்டில் ஜனவரி மாதம் 2 -ம் தேதி அன்று, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் திருச்சிக்கு வருகை தர உள்ளார்.
ஒரு பக்கம், பிரதமர் வருகையையொட்டி, திருச்சியில் பல அடுக்குப் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மறுபக்கம், பிரதமர் வருகையைப் பிரமாண்ட வகையில் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் வருகையையொட்டி, தமிழ்நாடே களைகட்டி வருகிறது.