தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அதீத கனமழை பெய்தது. இதில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அருவி போல் கொட்டிய கனமழையால், வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் கடும் சேதம் அடைந்தது. மக்கள் சொல்லென்னாத்துயரம் அடைந்தனர்.
வெள்ள பாதிப்பை உணர்ந்த சேவா பாரதி தென்தமிழ்நாடு அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் மூலம் படகுகளை உடனே ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் மீட்டுக் கொண்டு வந்தது. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, உடை, தூய குடிநீர் உள்ளிட்ட 21 வகையான அத்தியாவசியப் பொருட்கள் கடந்த பல நாட்களாக இரவு – பகலாக வழங்கி வருகின்றனர். அடுத்த கட்ட வாழ்க்கை முன்னேற்றத்திற்கான தேவைகளை உடனுக்கு உடன் பூர்த்தி செய்து வருகிறது.
குறிப்பாக, மழை வெள்ளம் வடியாத பகுதிகளுக்கு உணவு கொண்டு சேர்த்தல், குடிநீர் வாகனம் மூலம் தூய குடிநீர் வழங்குதல், படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சேகரித்து, அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே கிடைக்கும்படி செய்தல், மேலும், ஆம்புன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல் என மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு துரிதமாக செயல்பட்டனர்.
பொதுவாக நமக்கு துயரம் வரும்போது, கடவுள் யாராவது ஒருவர் ரூபத்தில் வந்து உதவி செய்வார் என்று கிராமங்களில் இன்றும் சொல்வது உண்டு. அதுபோலவே, மக்கள் துயரத்தில் பங்கு கொண்ட சேவா பாரதி தென்தமிழ்நாடு, மக்கள் துயரத்தையும், கண்ணீரையும் துடைத்தெறிந்தனர்.
உங்களுக்கு நன்றியை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை என சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பொது மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். மேலும், சேவா பாரதி தென்தமிழ்நாடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கரங்களைப் பிடித்து, தங்களது கண்களில் ஒற்றிக் கொண்டு, அன்பை வெளிப்படுத்தினர்.