ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானுக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
முப்படைகளின் உச்ச பட்ச தளபதி திரௌபதி முர்மு நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் செக்டர் சென்றார். அங்கு பணியாற்றும் பாலைவனப் படையின் துருப்புக்களுடன் அவர் கலந்துரையாடினார். மேலும் வீரர்களின் சவால் நிறைந்த பயிற்சிகளை அவர் பார்வையிட்டார். தேசத்தின் சேவைக்காக அவர்கள் செய்த பங்களிப்பிற்காக தனது பாராட்டுகளையும் குடியரசு தலைவர் தெரிவித்தார்.
பின்னர், ஜெய்சால்மரில் நடந்த லக்பதி திதி சம்மேளனத்தில் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவுடன் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய திரௌபதி முர்மு, சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரை, குறிப்பாக பெண்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்றுவதற்கு சுயஉதவி குழுக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி வருவதால், இந்த மாநாட்டில் உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.
சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். இந்த இலக்கை அடைய, தன்னம்பிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால், நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெற்றால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றும் முர்மு தெரிவித்தார்.
1998 ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவருமான ஏபிஜே அப்துல் கலாம் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.