2047-ம் ஆண்டு விளையாட்டில் இந்தியா சூப்பர் பாரதமாக மாற வேண்டும். இதற்கு, மூத்த விளையாட்டு வீரர்கள் மை பாரத் போர்ட்டல் தளத்தில் தன்னார்வலர்களாக பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கான பாராட்டு விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கலந்துகொண்டு பதக்கம் வென்றவர்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து, நகரிலுள்ள சாய் (SAI) விளையாட்டு மையத்திற்குச் சென்ற அமைச்சர், சாதகமான வானிலை மற்றும் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பைக் காரணம் காட்டி, பெங்களூரு இந்தியாவின் விளையாட்டு மையமாக மாறும் என்று எண்ணுவதாகத் தெரிவித்தார்.
மேலும், கிரிக்கெட், கால்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பெங்களூரு வீரர்கள் ஆர்வம் காட்டி வருவதை பாராட்டினார். அதேபோல, அகாடமிகளை முன்கூட்டியே நிறுவியதற்காகவும், விளையாட்டுகளில் வளர்ந்து வரும் முக்கியத்துவத்திற்கு பங்களிப்பதற்காகவும் மூத்த விளையாட்டு வீரர்களை பாராட்டினார்.
பின்னர், பெங்களூருவில் உள்ள தன்ராஜ் பிள்ளை, அர்ஜுன் ஹல்லப்பா போன்ற மூத்த விளையாட்டு வீரர்களால் நடத்தப்படும் லக்ஷ்யம் அகாடமியை பார்வையிட்டார். அப்போது, இருவரின் முயற்சியைப் பாராட்டியதுடன், நாட்டின் விளையாட்டுத் தரத்தை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற வசதிகளைக் கொண்டு வருமாறு மற்றவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “நமது விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 100-க்கும் அதிகமான பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இவர்களது சாதனைகள் பெரிய அளவில் பேசப்பட வேண்டும். எதிர்காலத்திலும் இதுபோன்ற சிறப்பான பங்களிப்பை அவர்கள் வழங்க வேண்டும்.
2047-ல் இந்தியாவை விளையாட்டில் சூப்பர் பாரதமாக மாற்ற வேண்டும். அனைத்து அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை. குறிப்பாக, மூத்த விளையாட்டு வீரர்கள் மை பாரத் போர்ட்டல் தளத்தில் தன்னார்வலர்களாக பதிவு செய்ய வேண்டும். மேலும், இளைஞர்களை விளையாட்டில் சேர ஊக்குவிக்க வேண்டும்.
நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் திறமையான இளைஞர்களின் வீடியோக்களை யார் வேண்டுமானாலும் இந்த தளத்தில் வெளியிடலாம். அத்தகைய திறமைசாலிகள் மீது அரசு தனி கவனம் செலுத்தும். நட்சத்திர வீரர்கள் வாரத்தில் குறைந்தது 2 மணி நேரமாவது தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” என்றார்.