பிரான்ஸில் 303 இந்தியப் பயணிகளுடன் சென்ற விமானம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பயணிகளுக்கு தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடா்பாக பிரான்ஸ் நாட்டின் ‘லி மோண்ட்’ நாளிதழில் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தென் அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு ஒரு விமானம் வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விமானத்தில் 21 மாதக் குழந்தை முதல் 17 வயது சிறுவர்கள் வரை 13 பேர் உட்பட மொத்தம் 303 இந்திய பயணிகள் இருந்தனர்.
இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக, கடந்த 21-ம் தேதி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக பிரெஞ்ச் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. எனவே, மேற்கண்ட விமானம் நிகரகுவா புறப்படுவதற்கு பிரெஞ்ச் அதிகாரிகள் தடை விதித்தனர்.
மேலும், அந்த விமான நிலையத்துக்கும் அந்நாட்டு காவல்துறை சீல் வைத்தது. அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர். அனைத்துப் பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவிடம் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேல் விசாரணைக்காக இருவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பிரான்ஸ் குற்றப் பிரிவு, எல்லை காவல் படை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வார விடுமுறையையொட்டி, இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், அமெரிக்கா அல்லது கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் நோக்கில், இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பயணிகளுக்கு தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழல் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பயணிகளின் நலன் உறுதி செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறது.