தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று காலை குஜராத் மாநிலத்துக்கு சென்றார். காலையில் தெருவோரக் கடை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் பயனடைந்த மக்களுடன் அமித்ஷா உரையாடினார்.
அப்போது அவர், “தற்சார்பு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த மிகப் பெரிய கனவு பிரதமர் மோடிக்கு இருக்கிறது. இதில், விண்வெளி மற்றும் இராணுவமும் அடக்கம். விண்வெளி, ஆராய்ச்சி, மேம்பாடு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.
அதேபோல, மறுபுறம் ஏழைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டிருக்கிறார். கொரோனா வந்தபோது இந்தியாவில் தொற்றுநோயின் தாக்கம் குறித்து அனைவரும் கவலைப்பட்டனர்.
ஆனால், இந்த தொற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு, தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடு இந்தியா என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி எவ்வித தடங்கலும் இன்றி கிடைக்கச் செய்தவர் பிரதமர் மோடி. கொரோனா தடுப்பூசி நாட்டு மக்களுக்கு இலவசமாகப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.
பின்னர், தனது சொந்தத் தொகுதியான காந்திநகர் மாவட்டம் கலோலில் உள்ள பன்சார் ஏரியைத் திறந்து வைத்ததோடு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கலோல் – கத்ராஜ் சாலையில் சர்தார் வல்லபாய் படேலின் 15 அடி உயர சிலையை திறந்து வைத்தார்.
மேலும், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி இரயில்வே மைதானத்தில் விளையாட்டு போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதேபோல, அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் குஜராத் சாகித்ய மஹோத்சவையும் அமித்ஷா தொடங்கி வைத்தார்.