2024 ஐபிஎல் தொடருக்காக சென்னை அணி, நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் ஏலத்தில் எடுத்து குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் டேரில் மிட்செல்.
2024 ஆம் ஆண்டு 17வது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
இந்த ஏலத்திற்கான பட்டியலில் 119 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருந்தனர். 7½ மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் ஏலம் போனார்கள்.
இவர்கள் மொத்தம் ரூ.230 கோடியே 45 லட்சத்திற்கு விற்கப்பட்டனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியாலும், கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
மேலும் இந்த ஏலத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு வாங்கியது.
நடந்துமுடிந்த ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் 552 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிஎஸ்கே அளித்த இந்த வாய்ப்பால் தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என்று டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ” சிஎஸ்கே அளித்த இந்த வாய்ப்பால் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஐபிஎல் ஏலத்தின்போது எனது மகளின் 5-வது பிறந்தநாள். பிறந்தநாள் அன்று எனது மகளுக்கு சிறந்த பரிசை அளித்துள்ளேன். நான் எவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டேன் என்பது அவளுக்கு புரியவில்லை.
ஆனால், இந்த தொகை பல வழிகளில் என் குடும்பத்திற்கு உதவும். இந்த மிகப்பெரிய ஏலத் தொகையின் மூலம் என் இரு மகள்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள். என்னைப் பொறுத்தவரை இது மிகவும் அருமையான விஷயம். சென்னை அணிக்காக விளையாடுவதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.