ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை முடிவடைந்த பின்னர் அனைவரின் கண்களும் ஐபிஎல்-யை நோக்கி நகர்ந்துள்ளது. ஐபிஎல்-லில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியானதில் இருந்தே புதிய புதிய சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. அதேபோல் நிறைய மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் முதல் மாற்றமாக லக்னோ அணியின் ஆலோசகராக செயல் பட்டு வந்த கெளதம் கம்பிர், அந்த அணியில் இருந்து கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இதனால் தற்போது லக்னோ அணியின் ஆலோசகர் இடம் காலியாக உள்ளது. இந்நிலையில் மிஸ்டர் ஐபிஎல் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் சுரேஷ் ரெய்னா லக்னோ அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வந்துள்ளது.
2022 மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே அணியால் கழற்றவிடப்பட்ட சுரேஷ் ரெய்னா, அதன்பின் எந்த அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இருப்பினும் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்.
அதேபோல் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவரின் வழிகாட்டுதலின் கீழ் ரிங்கு சிங் இன்று உச்சத்தில் இருக்கிறார். அதேபோல் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட சமீர் ரிஸ்வியையும் அடையாளம் காட்டியது சுரேஷ் ரெய்னா தான்.
இதனால் சுரேஷ் ரெய்னா உத்தரப் பிரதேச வீரர்களுக்கு உதவிகளை செய்து வரும் சுரேஷ் ரெய்னாவை ஆலோசகராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே ரசிகர் ஒருவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா லக்னோ அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அதற்கு பத்திரிகையாளர் ஒருவர், போலியான செய்தி என்று கருத்து பதிவிட்டார். ஆனால் பத்திரிகையாளரின் ட்வீட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா, அனைத்து நேரங்களிலும் உங்களின் செய்தி சரியாக இருக்காது என்று பதிவிட்டுள்ளார். இதனால் லக்னோ அணியின் ஆலோசகராக சுரேஷ் ரெய்னா அணுகப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளது.
Why ? Your news can’t be rite all the time ?
— Suresh Raina🇮🇳 (@ImRaina) December 23, 2023