தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தின் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. கொட்டித்தீர்த்த மழையால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. தொலைபேசி, சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மழை பாதிப்பில் இருந்து சற்று மீண்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனையடுத்து மீட்பு நடவடிக்கையில்,கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் ஆய்வு செய்கிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தின் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தேவைப்படும் பட்சத்தில் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஆயுதப் படைகளின் உதவி குறித்தும் விவாதிக்கப்பட்டது. சேதத்தை மதிப்பிடுவதற்கு அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுவின் வருகை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.