இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வியில் இருந்து இந்திய அணி வீரர்கள் மீண்டு வந்துவிட்டதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை ஏற்று கொள்ள முடியாமல் விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினர்.
இதனால் உலகக்கோப்பை தோல்வியில் இருந்து இந்திய அணி வெளி வருவதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் விராட் கோலி, ரோகித் சர்மா, சிராஜ், பும்ரா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் முதல்முறையாக களத்திற்கு திரும்ப உள்ளனர்.
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல், அனைவரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளனர்.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரின் தோல்வி குறித்தும் இந்திய சீனியர் வீரர்களின் மனநிலை குறித்தும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
அதில், ” உலகக்கோப்பை தோல்வி நிச்சயம் ஏமாற்றம் தான். ஆனால் அதிலிருந்து நிச்சயம் வெளியேறி, அடுத்த தொடருக்கு தயாராக வேண்டும். அடுத்தடுத்து வரும் டெஸ்ட் தொடரை வென்று 2025ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராக வேண்டும். அதனால் துவண்டு போய் கீழே விழுந்து கிடப்பதற்கான நேரம் கிடையாது.
நிச்சயம் அனைவரும் அடுத்த தொடருக்கு தயாராக உள்ளனர். உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடினோம் என்றே நினைக்கிறேன். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நிச்சயம் சவால் நிறைந்தது. இங்குள்ள ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகம் அதிகமாக இருக்கும்.
அதனால் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதேபோல் எந்தவொரு செஷனையும் விட்டு கொடுக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். சில நேரங்களில் டாப் ஆர்டர் சரிந்தாலும், சில பார்ட்னர்ஷிப் அமைத்து கம்பேக் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் 50 முதல் 60 ரன்கள் வரை கூடுதலாக பெற வேண்டும். அதனால் எந்த அணி சிறப்பாக பேட்டிங் செய்கிறதோ, அந்த அணி தான் வெற்றிபெறும். டேட்டாவின் படி பார்த்தால் கூட பேட்டிங் செய்வது எளிதான விஷமல்ல என்பது புரியும்.
சதம் விளாசுவதை விடவும் தரமான கிரிக்கெட்டையும், அனுபவத்தையும் பயன்படுத்தி விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.