ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் இருக்கிறது. மேலும், பள்ளிகளை நடத்தி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பாதிரியார்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ மத முக்கிய பிரமுகர்கள், பள்ளிக் குழந்தைகளுடன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். அப்போது, அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “கிறிஸ்துமஸ் திருநாளில் உலக மக்களுக்கும், கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
இத்தகைய சிறப்புமிக்க மற்றும் புனிதமான நாளில், நீங்கள் அனைவரும் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கிறிஸ்துமஸ் என்பது நாம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு நாள். இது அவரது வாழ்க்கையின் செய்தி மற்றும் விழுமியங்களை நினைவுகூருவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். அவர் கருணை மற்றும் சேவையின் இலட்சியங்களை வாழ்ந்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க இயேசு கிறிஸ்து பாடுபட்டார். அவரது இலட்சியங்கள் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு வழிகாட்டும் வெளிச்சமாகச் செயல்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, புனித பாப்பரசரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது எனக்கு மிகவும் மறக்கமுடியாத தருணம். உலகை சிறந்த இடமாக மாற்ற, சமூக நல்லிணக்கம், உலகளாவிய சகோதரத்துவம், காலநிலை மாற்றம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற விஷயங்களை நாங்கள் விவாதித்தோம்.
நம் வாழ்க்கையில் நம்மை ஒன்றிணைக்கும் பல ஒத்த மதிப்புகளை நாம் காண்கிறோம். எடுத்துக் காட்டாக, பரிசுத்த வேதாகமம் கடவுள் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறாரோ, அது மற்றவர்களின் சேவைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறது. இதுதான் ‘சேவா பர்மோ தர்மம்’. உண்மைக்கு பரிசுத்த வேதாகமத்தில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
சத்தியம் மட்டுமே நமக்கு இரட்சிப்புக்கான வழியைக் காட்ட முடியும் என்று அது கூறுகிறது. தற்செயல் நிகழ்வு என்னவென்றால், அனைத்து மத நூல்களும் இறுதி உண்மையை அறிவதில் கவனம் செலுத்துகின்றன. இந்த ஒருங்கிணைப்பு 21-ம் நூற்றாண்டின் நவீன இந்தியாவை அடையச் செய்யும் புதிய உயரங்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகை ஏழைகளின் நலனுக்கானது. ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் உள்ளது. கிறிஸ்தவர்கள் சமூக நீதியின் பக்கம் நிற்பவர்கள். பல பள்ளிகளை நடத்தி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றனர். நாட்டிற்கு உங்கள் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது” என்றார்.