குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு மீண்டும் வந்துள்ள நிலையில், இதற்காக குஜராத் அணி நிர்வாகத்திற்கு மும்பை அணி நிர்வாகம் ரூ.100 கோடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்காக மும்பை அணி நிர்வாகம் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியவை ரூ.15 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கியது.
அதேமட்டுமின்றி நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்றும் மும்பை அணி நிர்வாகம் அறிவித்தது. இது ரசிகர்கள் முதல் மும்பை அணியின் வீரர்கள் வரை அனைவருக்கும் அதிருப்தியை அளித்தது.
சமீபத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட வீடியோவில், சிஎஸ்கே அணி ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றால், மும்பை அணி நிர்வாகம் உடனடியாக 2 கோப்பைகளை வெல்வதற்கான தீவிரத்தை காட்டும் என்று கூறியிருப்பார்.
2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. ஆனால் மும்பை அணி கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. இதற்கு மும்பை அணி வீரர்கள் சிலர் சிதறியதே காரணமாக பார்க்கப்பட்டது.
குறிப்பாக ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, ராகுல் சஹர், பொல்லார்ட் உள்ளிட்டோர் விலகினர். அதில் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றார்.
2வது சீசனில் இறுதிப்போட்டி வரை சென்று 2 பந்துகளில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார். இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் கரியர் உச்சத்திற்கு சென்றது.
கேப்டனாகவும், வீரராகவும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருவதை மும்பை அணி நிர்வாகம் கண்காணித்து கொண்டே இருந்தது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா உயர்ந்த பின், குஜராத் அணி நிர்வாகத்திடம் பல்வேறு விளம்பர ஒப்பந்தங்கள் கோரியதாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவின் கோரிக்கைகளை ஏற்றுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்க, குஜராத் அணி நிர்வாகம் தரப்பில் பணத்தின் மூலமாக ஒப்பந்தம் முடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஹர்திக் பாண்டியாவை வாங்கிய ரூ.15 கோடி ஒப்பந்தம் போக, நிர்வாகங்களுக்கு இடையில் ரூ.100 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் விதிகளின் படி வீரர்களுக்கான ஒப்பந்த தொகை போக, அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் வழங்குவதற்கும் இன்னொரு தொகை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.