திருத்தணி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியின் மறுநாள் வரும் கிருத்திகை முக்கோட்டி கிருத்திகை எனப்படும்.
முக்கோட்டி கிருத்திகை விழாயொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் அதிகாலையில் மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்குப் பஞ்சாமிர்த அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது, உற்சவருக்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில், ஏழு மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசித்தனர்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, முருகன் கோவில் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் கடந்த, 14 -ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வாகனங்கள் மலைப்பாதை செல்லவும், பக்தர்கள் நடந்து செல்லவும் தடை விதித்து இருந்தனர்.
இந்த நிலையில், முக்கோட்டி கிருத்திகையொட்டி, மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லவும், கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், முருக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.