மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி பாகிஸ்தானில் பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகவும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனருமான ஹபீஸ் முகமது சயீத்தின் அரசியல் அமைப்பான பாகிஸ்தான் மார்கஷி முஸ்லிம் லீக் (பிஎம்எம்எல்) அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
ஹபீஸ் சயீதின் மகன் தல்ஹா சயீத் லாகூர் நாடாளுமன்ற தொகுதியில் (NA-127) போட்டியிடுகிறார். பாகிஸ்தான் மார்கஷி முஸ்லிம் லீக் கட்சியின் மத்தியத் தலைவர் காலித் மசூத், சிந்து (NA-130) தொகுதியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
இதனிடையே தேசிய மற்றும் மாகாண தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்தது. லாகூரில் உள்ள 14 தேசிய சட்டமன்றம் மற்றும் 30 மாகாண தொகுதிகளுக்கு 600 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் தகுதியான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வரும் நாட்களில் வெளியிடும் என்பதால், பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 2019ஆம் ஆண்டு ஜூலை 17, முதல் சிறையில் இருக்கும் முஹம்மது ஹபீஸ் சயீத், ஏப்ரல் 2022 இல் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சிறப்பு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் “பயங்கரவாதத்திற்கு நிதியளித்ததற்காக” 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட போதிலும், சயீத் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நாடு கடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.