எஃப்-16 போர் விமானங்கள் வாங்குவது குறித்து அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் பேசி வருவதாக அமெரிக்காவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் ஜோஸ் மானுவல் தெரிவித்துள்ளார்.
பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள, தென் சீனக்கடல் பகுதி, சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தீவுகள் தமக்கே உரியது என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், தென்சீனக் கடலில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.
உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, தென் சீனக்கடல் பகுதி வழியாக நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக கூறப்படுவதாலும், இதற்கு பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
சமீப காலமாக தென் சீனக் கடல் பகுதியில், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே மோதல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரை அழைத்து எச்சரித்துள்ளார். சீனாவின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல், பிலிப்பைன்ஸ் தனது பாதுகாப்பிற்காக எந்த வெளி நாட்டையும் நம்பக்கூடாது என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, எஃப்-16 போர் விமானங்கள் குறித்து அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் பேசி வருவதாக அமெரிக்காவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் ஜோஸ் மானுவல் ரோமுவால்டெஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நமது நாடு வான்வெளி பாதுகாப்பில் உறுதியாக உள்ளது. இதற்காக அமெரிக்காவில் இருந்து எஃப்-16 போர் விமானம் வாங்குவது குறித்து நீண்ட நாட்களாக விவாதித்து வருகிறோம். வான் மற்றும் தரைத் தாக்குதல் ஆகிய இரண்டையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட எஃப்-16 போர் விமானம் நமக்கு தேவை என்று கூறினார்.