தற்போதைய நிலவரப்படி நாட்டில் பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் வேறு யாருமே இல்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூறியிருக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராகப் பதவி வகித்தார்.
இதனிடையே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா உடைந்து, 40 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தது. இந்த சூழலில், சரத் பவாருக்குப் பிறகு கட்சியின் தலைவர் யார் என்பதில் அஜித் பவாருக்கும், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
எனவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து சில எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறிய அஜித் பவார் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தார். இதையடுத்து, அவருக்கு மீண்டும் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அஜித் பவாரிடம், 2024 தேர்தலில் எதிர்கட்சிகளின் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அஜித் பவார், “தற்போதைய நிலவரப்படி நாட்டில் பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் வேறு யாரும் இல்லை.
பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது போன்ற முடிவானது, ஓரிரு விஷயங்களை மட்டும் அடிப்படையாக வைத்து எடுக்கப்படாது. பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அனைவரும் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வார்கள்.
ஆனால், நாட்டின் நலன்களை பாதுகாப்பது யார்? நாடு யாருடைய கைகளில் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்கும்? சர்வதேச அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்தியது யார்? என்பது போன்ற அம்சங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில், பிரதமர் மோடிதான் நாட்டு மக்களின் தேர்வாக இருப்பார்” என்றார்.