மயிலாடுதுறையில் உள்ள கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கோனேரிராஜபுரம் தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு உலகின் மிக பெரிய எட்டரை அடி உயர நடராஜபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, திராட்சை மாலை, ஆபரணங்கள், ருத்ராட்ச மாலை, புலித்தோல், பட்டாடை அணிவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.