சி.ஏ.ஏ. நாட்டின் சட்டம். இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று உறுதிபடக் கூறியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், இச்சட்டத்தை அமல்படுத்துவதில் தங்களது அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளது. எனவே, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, தங்களது கட்சி நிர்வாகிகளுடனும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, பா.ஜ.க. அமைப்புகள், சமூக வலைத்தளப் பிரவு, ஐ.டி. பிரிவு உள்ளிட்ட உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் சென்றிருந்தனர்.
அப்போது பேசிய அமித்ஷா, “குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) நமது நாட்டினுடைய சட்டம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களை தவறாக வழிநடத்துகிறார். இச்சட்டத்தை அமல்படுத்துவது எங்களது கட்சியின் உறுதிப்பாடு என்பதை தெளிவாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் பா.ஜ.க. 35 இடங்களைப் பிடிக்கும். அதேபோல, அடுத்து நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும்.
பா.ஜ.க. என்பது ஊடுருவலை தடுப்பது, பசுக் கடத்தல் மற்றும் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ. மூலம் குடியுரிமை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. ஆகவே, சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.