எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ள சம்பவங்கள் நிகழ்ந்தால் அனைத்து அதிகாரிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் எடுத்துள்ள மீட்பு நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார்.
தூத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம்), வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர்கள், நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் சிஎம்டிகள், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவன தலைவர் – நிர்வாக இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, நீர் நிலைகளில் உடைப்புகள் அல்லது கொள்ளளவை மீறி நிரம்பி வழியும் சந்தர்ப்பங்களில் ஒரு வலுவான முன் எச்சரிக்கை அமைப்பு முறையை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் கண்டறிந்து இத்தகைய அபாயங்கள் குறித்து எச்சரிப்பதில் இந்த அமைப்பு முக்கியமானதாக இருக்கும் என்று அவர் எடுத்துரைத்தார்.
இதன் மூலம் இதுபோன்ற சூழ்நிலைகளில் சொத்துக்களுக்கு ஏற்படக் கூடிய சேதம் மற்றும் உயிர் இழப்பு ஆகியவற்றைத் தடுக்கவோ அல்லது அதன் வீரியத்தைக் குறைக்கவோ முடியும் என்று அமைச்சர் கூறினார். மேலும் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி மாநில அரசின் அதிகாரிகள் இயற்கை பேரிடரை அறிவிப்பதில் நடவடிக்கை எடுத்தவுடன், வங்கிகள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க எஸ்.எல்.பி.சி செயல்முறை மூலம் முன்முயற்சிகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதி வாய்ந்த 2.5 இலட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை தக்க தருணத்தில் வழங்க அறுவடைப் பணிகளை விரைந்து முடிக்குமாறு காப்பீட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நிதியமைச்சர் அறிவுறுத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.38 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பல்வேறு காப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து நிர்வகிக்க, வரும் நாட்களில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து, தொடர் முகாம்களை நடத்த வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார்.
வெள்ளம் தொடர்பான இழப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக காப்பீடு நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்கள் நிதியமைச்சரிடம் உறுதியளித்தனர்.
பின்னர், திருமதி நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, தூத்துக்குடி தாலுகா கோரம்பள்ளம் மற்றும் மறவன்மடம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் முறப்பநாடு, கோவில்பத்து மற்றும் ஏரல் தாலுகாவில் உள்ள ராஜபதி & தெற்கு வலவள்ளன் ஆகிய பகுதிகளில் சுமார் 120 கி.மீ தொலைவிற்கு பயணித்து மக்களை சந்தித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிதி அமைச்சர் தனது பயணத்தின் போது, மாவட்டத்தின் பல்வேறு வட்டங்கள் மற்றும் கிராமங்களில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும், மக்களுடன் கலந்துரையாடிய அவர், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது என உறுதியளித்தார்.
வெள்ளத்தின் போது தங்கள் வீடுகளை இழந்து காப்பகங்களில் வசித்த பல பெண்கள், நிதியமைச்சர் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தகுதியான பெண்களின் வீடுகளை மீண்டும் கட்டித் தரவும், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வராதவர்களுக்கு வீடுகளை மீண்டும் கட்டுவதற்கான வழிகளை வகுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தோட்டக்கலை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், பல ஹெக்டேர் விவசாய நிலங்கள் ஆற்று மணலால் மூடப்பட்டு, சாகுபடிக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாகவும் ஸ்ரீவைகுண்டம் மக்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர். தோட்டக்கலை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொண்ட அமைச்சரிடம் பொங்கல் மற்றும் வரவிருக்கும் பண்டிகைகளுக்காக தாங்கள் தயாரித்து வைத்திருந்த பொருட்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்கள் இழப்பு குறித்து பெண் தொழில் முனைவோர் பலர், எடுத்துரைத்தனர்.
இந்த விஷயத்தில், மண்பாண்ட பொருட்கள் மற்றும் ரங்கோலி வண்ணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உள்ளூர் வணிக முன்முயற்சிகளை மேற்கொள்ளும் பெண்கள், வெள்ளத்தில் உற்பத்திக்கான கச்சா பொருட்களை இழந்துள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறு நிதியமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பயணித்து நிர்மலா சீதாராமன், தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு பகுதியில் ஆய்வுக்கு சென்றவரிடம் அங்குள்ள பொதுமக்கள் சந்தித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள், இந்த வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், தேசியப் பேரிடராக அறிவிக்க வாய்ப்பே இல்லை. வங்கிகள் மூலமாக என்ன உதவி பண்ண முடியுமோ அதை நாங்கள் செள்கிறோம். மாநில அரசுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மற்றபடி தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரைக்கும் தேசிய பேரிடர் என எப்போதும் அறிவிக்கப்பட்டதே இல்ல. சுனாமி ஏற்பட்டபோதே தேசிய பேரிடராக அறிவிக்க வில்லை என கூறினார்.
இக்கூட்டத்தில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. சசிகலா, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.