டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இந்தியாவுக்குச் செல்லும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
புதுடெல்லி சாணக்யபுரி பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்திருக்கிறது. இதன் அருகே நேற்று மாலை 5:48 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. உடனடியாக மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த டெல்லி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர், போலீஸாரும், தேசிய புலனாய்வு அமைப்பினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இஸ்ரேல் தூதர் பெயருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. இக்கடிதம் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தூதரகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீஸார் கூறுகையில், “குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து ஒரு கடிதம் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பக்க கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதம் எழுதியதில் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்” என்றனர்.
அதேபோல, இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் துணை தூதர் ஒஹாத் நகாஷ் கெய்னர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “5 மணிக்குப் பிறகு சில நிமிடங்களில் தூதரகத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டது. தூதரக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுடைய பாதுகாப்புக் குழு டெல்லி போலீஸாருடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.
இதற்கிடையே, தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புக் கவுன்சில், இந்தியா செல்லவிருக்கும் அந்நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும், இந்தியாவில் மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், மார்க்கெட்கள் போன்ற இடங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
ரெஸ்டாரென்ட், ஹோட்டல்கள், பப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டினர் என அடையாளப்படுத்துவது போன்ற அம்சங்களை தவிர்க்க வேண்டும். இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புக் குழுவுடன் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே போர் நடைபெற்று வருவதால், பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
இதன் காரணமாகவே, ஹமாஸ் ஆதரவு அமைப்பினர் டெல்லியிலும் இஸ்ரேல் தூதரகத்தின் அருகே குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.