பிரதமர் மோடியின் அயோத்தி வருகையை முன்னிட்டு இந்திய நேபாள எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அயோத்தியில் விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அயோத்தி விமான நிலையத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி முதல் விமானப்போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு,சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளது. புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதனையடுத்து அயோத்தி மற்றும் இந்திய நேபாள எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச காவல்துறை மற்றும் மத்திய உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லை வழியாக செல்ல அனுமதிக்கும் முன் அவர்களை பற்றிய முழு விவரங்களை கண்டறிய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதான சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்தோ-நேபாள எல்லைக் காவல் துறை, உள்ளூர் புலனாய்வுப் பிரிவு (எல்ஐயு) மற்றும் உளவுத்துறை அமைப்புகள் எல்லையில் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அகிலேஷ்வர் சிங் கூறினார்.
நேபாள எல்லையை ஒட்டிய மஹராஜ்கஞ்ச்,சித்தார்த்த நகர், ஷ்ரவஸ்தி மற்றும் பல்ராம்பூர் மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.