திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுக்காவில் உள்ள பாபநாசம் கோவிலுக்குச் சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது.
இதில், அமலி கான்வென்ட் முதலில் 44 ஏக்கர் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. அப்போது, மனுதாரருக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால், கோவில் நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை அமலி நிறுவனம் மறுத்துவிட்டது.
இது தொடர்பான வழக்கு அம்பாசமுத்திரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆனால், கோவிலின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, 1985 -ல் தென்காசியில் உள்ள சப் -கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதில், இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டது. இதில், 11 ஏக்கர் நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதி நிலத்தை அமலி கான்வென்ட் திருப்பி அளித்தது.
மேலும், நிலத்தின் வாடகையாக ஆண்டுக்கு 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதனிடையே, விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்டப்பட்டதால் அமலி நிறுவனத்தை வெளியேற வேண்டும் என கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அளித்தது. ஆனால், இந்த நோட்டீசை அமலி நிறுவனம் புறக்கணித்துவிட்டது.
மேலும், இந்து சயம அறநிலையத்துறை சட்டத்தின்படி, கோவில் நிலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை நீட்டிப்பு செய்யாமல் அலட்சியம் செய்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்றது.
இதில், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்பு மற்றும் வெளியேற்றம் தொடர்பான விவகாரங்களில் இணை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.
அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அமலி கான்வென்ட் ஆகியவை தாக்கல் செய்த மூன்று ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
கோவில் சொத்தை அமலி கான்வென்ட் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
மேலும், கோவில் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததை நியாயப்படுத்த மனுதாரர் குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
எனவே, வரும் 2024- மார்ச் மாதம் 31-க்குள் கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அமலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.