அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரவிலும் ஒளிரும் வகையிலான 30 அடி உயர தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அயோத்தில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமானம் நிலையம் மற்றும் சீர் செய்யப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் அயோத்தி நகரின் முக்கிய சாலைகளில் இரவிலும் சூரியனைப்போல ஒளிரும் பிரமாண்ட தூண்கள் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக உத்தரப்பிரதேச பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நயா காட் அருகே லதா மங்கேஷ்கர் சவுக்கை அயோத்தி பைபாஸுடன் இணைக்கும் சாலையில் 40 தூண்கள் நிறுவப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே 10 அங்கார தூண்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும்,எஞ்சியுள்ள தூண்களை நிறுவும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட்டால் ஆன ஒவ்வொரு தூணிலும் சிறப்பு இழையால் செய்யப்பட்ட அலங்கார உறைப்பூச்சு உள்ளது. அதில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகமும், ஹனுமானின் சூலாயுதமும் மற்றும் பிற அலங்கார வடிவங்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அயோத்தி விமான நிலைய திறப்பு விழாவிற்கு டிசம்பர் 30ஆம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி, இந்த சாலையில் செல்வார் என்றும்,இந்த ‘சூரிய ஸ்தம்பங்கள்’ அவரை கோயில் நகரத்திற்கு வரவேற்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.