2024 சீசனுக்கான கொப்பரை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர், “2024 சீசனுக்கான குறைந்தபட்ச ஆதார விலையானது முந்தைய சீசனைக் காட்டிலும், கொப்பரை அரைப்பதற்கு குவிண்டாலுக்கு 300 ரூபாயும், பந்து கொப்பரைக்கு குவிண்டாலுக்கு 250 ரூபாயும் அதிகரித்துள்ளது. இந்த குறைந்தபட்ச ஆதார விலை தென்னை விவசாயிகளுக்கு அதிக லாபத்தை உறுதி செய்யும்.
2014-15-ம் ஆண்டில் அரைக்கும் கொப்பரைக்கு குவிண்டால் ஒன்றுக்கு 5,250 ரூபாயாக இருந்தது, 2024-25-ல் குவிண்டால் ஒன்றுக்கு 11,160 ரூபாயாக இருக்கும். பந்து கொப்பரைக்கு, 2014-15-ல் ஒரு குவிண்டால் 5,500 ரூபாயாக இருந்தது, 2024-25-ல் குவிண்டால் ஒன்றுக்கு 12,000 ரூபாயாக இருக்கும்.
இது தவிர, பீகாரில் உள்ள திகா மற்றும் சோன்பூரை இணைக்கும் கங்கை ஆற்றின் குறுக்கே 4.56 கி.மீ. நீளமுள்ள 6 வழிப்பாதை பாலம் கட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இத்திட்டத்துக்கான மொத்தச் செலவு 3,064 கோடி ரூபாய்.
அதேபோல, திரிபுராவில் உள்ள கோவாய் – ஹரினா சாலையின் 135 கி.மீ. நீளத்தை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இத்திட்டமானது 1,511 கோடி ரூபாய்க்கு மேல் கடனுதவியை உள்ளடக்கிய 2,486 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது.
மேலும், வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறையில் பொது ஒலிபரப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் மலேசியா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த ஆண்டு நவம்பரில், பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி மற்றும் மலேசிய ரேடியோ டெலிவிசியன் மலேசியா (ஆர்டிஎம்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம், பல்வேறு நாடுகளுடன் பிரசார் பாரதி கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முக்கிய நன்மை கலாச்சாரம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, செய்திகள் மற்றும் பிற துறைகளில் உள்ள திட்டங்களைப் பரிமாறிக் கொள்வதாகும்.
அதோடு, மாணவர்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் நடமாட்டத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான நடமாட்டம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே ஒழுங்கற்ற இடம்பெயர்வு தொடர்பான பிரச்சனைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆரம்ப தொழில் அனுபவத்தைப் பெற விரும்பும் இந்திய மாணவர்கள், இத்தாலியில் கல்விப் பயிற்சியை முடித்த பிறகு, 12 மாதங்கள் வரை இத்தாலியில் தற்காலிக வதிவிடத்தைப் பெறலாம்.
அதேபோல, நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகத்தை திறப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த முடிவு, உலகம் முழுவதும் இந்தியாவின் இராஜதந்திர பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த உதவும்.
மேலும், இந்தியாவின் மூலோபாய மற்றும் வணிக நலன்களை மேம்படுத்தவும் உதவும். தவிர, இது ஆக்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக சிறப்பாக சேவை செய்யும். தூதரகம் 12 மாதங்களுக்குள் திறக்கப்பட்டு முழுமையாக செயல்படும்” என்றார்.