2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் நடைபெற்ற ஒரு சில நிகழ்வுகளை பற்றிப் பார்ப்போம்.
2023ஆம் ஆண்டு முடிவடையும் நேரத்தில் இந்திய விளையாட்டு என்று எடுத்து பார்த்தால் அதில் பல மறக்கமுடியாத நிகழ்வுகளும் சில மறக்க நினைக்கும் கசமான நிகழ்வுகளும் உள்ளது. அதனைப் பற்றிப் பார்ப்போம்.
1. இந்த ஆண்டு கிரிக்கெட்டை உலகக்கோப்பை வெற்றியோடு தொடக்கி வைத்தனர் நமது பாரத பெண்கள். ஆம் இந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது.
2. இந்த வருடம் முதன் முதலாக ஐபிஎல் போன்று பெண்களுக்காக மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடங்கப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.
3. அதேபோல் இந்த ஆண்டு முதல் முறையாக ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. களமிறங்கிய முதல் வருடத்திலேயே இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தது.
4. இந்திய மகளிர் டெஸ்ட் அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது. அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய பெண்கள் வென்றனர்.
5. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் சென்னை ரசிகர்களுக்கு மறக்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை காரணமாக போட்டி தடைபட்டு அடுத்தநாளுக்கு போட்டிக்கு மாற்றி வைக்கப்பட்டது. அடுத்த நாளும் மழை வந்ததால் கோப்பை குஜராத் அணிக்கு கொடுக்கப்படும் என்று கூறியபோது மழை நின்று கடைசி இரண்டு பந்தில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா 10 ரன்களை எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
அதனைக் கண்ட தோனி மௌனமாக கண்ணீர் சிந்தி ஜடேஜாவை தூக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எத்தனை இறுதிப் போட்டிகள் வந்தாலும் சிஎஸ்கே ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத இறுதிப்போட்டியாக இந்த ஆண்டின் இறுதிப்போட்டி இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
6. இந்த வருட ஆரம்பத்திலேயே இந்திய ஆண்கள் அணி இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி பெற்றது.
7. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தனது அசால்ட்டான ஆட்டத்தை வெளிப்படுத்தி எளிதாகக் கோப்பையை வென்றது.
8. அதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியே அடையாமல் தொடர்ந்து 10 போட்டிகளை வெற்றி பெற்று அசைக்கமுடியாத அணியாக திகழ்ந்தது நவம்பர் 19 ஆம் தேதி இரவுக்கு முன்பு வரை. இந்தியா 12 வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் அடி வைத்து வெற்றியை நோக்கி சென்றது.
9. கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் அசைக்க முடியாத சாதனையை இந்திய வீரர் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் முன்னிலையில் அவரது சொந்த மண்ணில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஒரு நாள் தொடரில் 50 சதங்கள் பதிவு செய்து அவரின் சாதனையை முறியடித்தார்.
10. உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.